வாக்கு இயந்திரங்களில் மோசடி?? புகார் அளித்த எதிர்க்கட்சிகள்!

டெல்லி:Tamil News

22 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (23/05/2019) வெளியாக உள்ளன. தேர்தலுக்கு பின்பு பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் மத்தியில் பாஜக அல்லாத ஆட்சியை அமைப்பது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு.

Tamil news

இந்நிலையில்  காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 22 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 22 கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியது : தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஒப்புகைச் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகைச் சீட்டை சாிபார்ப்பதாக கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துஉள்ளனர்.

 

Leave a Reply