​எண்ணெய் இல்லா தண்ணீர் பூரி!!

தேவையானவை:.
கோதுமை மாவு – 150 கிராம்
காய்கறிச்சாறு  (வெண்பூணி, கேரட், தக்காளி 
ஏதேனும் ஒரு காயில் சாறு தயாரிக்கவும்)
இந்துப்பு – தேவையான அளவு
தேங்காய்த் துருவல்- அரைமூடி,
கரும்பு வெல்லத்தூள் – 100 முதல் 150 கிராம்
மாவு பிசையும் முறை:
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் சிறிது சமையல் எண்ணெய் கலந்து, சிறிது பால் கலந்த தண்ணீர் சேர்த்து மாவு பிசைவார்கள். இதற்குப் பதிலாக இங்கு காய்கறிச் சாறு 50 கிராம் எடுத்து அரை மணி நேரம் முன்பாக கோதுமை மாவில் கலந்து, சிறிதளவு நீர்விட்டு (பாலுக்குப் பதிலாக கெட்டித் தேங்காய்ப்பால், முளைதானியப் பால் கலந்தும் தயாரிக்கலாம்) நன்றாகப் பிசையவும். இதனுடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்துப் பிசையவும். பிறகு, இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிக்கட்டையில் தேய்க்கலாம். அல்லது பிரஸ்ஸிங் கருவியை பயன்படுத்தியும் தேய்க்கலாம்.
தண்ணீர் இல்லாத பூரி தயாரிப்பு முறை:
5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் (மூன்றரை லிட்டர்) நீர் விட்டு, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். தேய்த்த மாவை சல்லிக் கரண்டியில் வைத்து, கொதிநீரில் இறக்கி, இரண்டு நிமிடம் வேக வைத்து அப்படியே கரண்டியுடன் வெளியே எடுத்து, தண்ணீர் வடிந்தவுடன் வேறு தட்டில் வைக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் குருமா, தக்காளி கொஸ்து, விதம்விதமான சட்னி என்று எதையும் இந்த பூரிக்கு சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்:
சொட்டு எண்ணெய் இல்லாத, அரிசி இல்லாத அருமையான உணவுதான் இந்த தண்ணீர் பூரி. தேங்காய்த்துருவலை சமைக்காமல் அப்படியே பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் பயம் தேவையில்லை. பல் இல்லாதவர்களுக்கு மிகவும் பொருத்தமான உணவு. மற்ற பூரியை விட தண்ணீர் பூரி அளவான வெப்பசக்தி (கலோரி) உடையதென்பதால், ஒருவேளையில்  5 முதல் 8 வரை சாப்பிடலாம். தொப்பை, கொலஸ்ட்ரால், கூடுதல் எடை, இதயநோய், அல்சர், நீரழிவு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இது அருமையான உணவு. தினமும் ஒருவகை மாவில், ஒருவித காய்கறிச்சாறு, ஒருவகை கீரைச்சாறு என மாற்றி மாற்றித் தயாரிக்கலாம்.
குறிப்பு: கோதுமை மாவுக்கு பதிலாக, ராகி மாவு, கம்பு மாவு, சத்து மாவு இவற்றில் ஏதேனும் ஒரு மாவைப் பயன்படுத்தியும் பூரி தயாரிக்கலாம்.
காய்கறிச் சாறுக்குப் பதிலாக கீரைச்சாறு (பசலைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை என ஏதேனும் ஒரு கீரை) பயன்படுத்தலாம். அல்லது மூலிகைச் சாறு (கறிவேப்பிலை/ மணத்தக்காளி/ பூண்டு/ வல்லாரை/ வில்வம் என ஏதேனும் ஒரு மூலிகை) பயன்படுத்தலாம். கடல் உப்பு பயன்படுத்தக் கூடாது என்பதால், இங்கே இந்துப்பு பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக கறுப்பு உப்பு, எலுமிச்சைச்சாறு, நெல்லிப்பொடி ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். 
கரும்பு வெல்லத்துக்குப் பதிலாக பனைவெல்லம், தேன், பேரீட்சைத் துண்டுகள் என ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவகை மாவில், ஒருவித காய்கறிச்சாறு, ஒருவகை கீரைச்சாறு என மாற்றி மாற்றித் தயாரிக்கலாம். இந்த பூரிக்கான காய்கறிச்சாறு கேரட் அல்லது தக்காளிச் சாறாக இருந்தால், பூரியானது சிவப்பாக இருக்கும். கீரைச்சாறு, மூலிகைச்சாறு பயன்படுத்தி செய்தால், பச்சையாக இருக்கும். வாரம் ஒருமுறை இருமுறை இந்த உணவை இரவில் செய்து சாப்பிடுவது நல்லது.

Leave a Reply