​காட்டுச் செல்லியம்மன்எல்லை சாமிகள்!

திருவள்ளூர் மாவட்டம்- பெரிய பாளையத்தில் உள்ள ஸ்ரீபெரிய பாளையத்தம்மன் கோயில் பிரசித்திப் பெற்றது. இங்கிருந்து மேற்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது செங்கரை. இந்தக் கிராமத்தின் வடக்கு எல்லையில் கோயில் கொண்டிருக்கிறாள் காட்டுச் செல்லியம்மன்.
ஆந்திர மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்தி ருக்கும் இந்த செங்கரை கிராமம், ஒருகாலத்தில் வனப்பகுதியாக இருந்தது. வெள்ளைக்கார அதிகாரிகள் இங்கு வந்து வேட்டையாடுவது வழக்கம். ஒருமுறை, வேட்டையின்போது மான் ஒன்று தென்பட, சிப்பாய்கள் அதைத் துரத்தினர். தப்பியோடிய மான், அடர்ந்த புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது. சிப்பாய்கள் புதரை அகற்ற முற்பட்டனர். அப்போது, புதருக்குள் இருந்து ராட்சத நாகம் ஒன்று வெளிப்பட்டது. வித்தியாச மான அதன் தோற்றத்தைக் கண்டு பயந்த சிப்பாய்கள், அருகில் உள்ள கிராமத்துக்கு ஓடி வந்தனர். அதிசய நாகத்தைப் பிடிக்க அங்கிருந்து ஆட்களை அழைத்துச் சென்றனர். தவிர, விஷயம் அறிந்த ஊர்மக்கள் பலரும் அங்கு கூடினர்.
ஆனால், கிராமத்து ஆட்களும் நாகத்தைப் பிடிக்க முடியாமல் திணறினர். அவர்கள், புதரை நெருங்கியபோது படமெடுத்து ஆடிய நாகம், சரேலென புதருக்குள் இருந்த ஒரு புற்றில் பதுங்கிக் கொண்டது. உடனே, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் புற்றை இடிக்கத் துவங்கினர். ஆனால், புற்றுக்குள் நாகம் இல்லை. மாறாக… அழகிய அம்மன் சிலை ஒன்று இருந்தது. இதைக் கண்ட கிராம மக்கள், ஆளுக்கொரு கதையைக் கூறத் துவங்கினர். அப்போது, திடீரென அருள் வந்து ஆடிய பெண்ணொருத்தி, ”இந்த இடத்துல குடி கொண்டிருப்பது காட்டுச் செல்லிடா” என்றாள்! அம்மன் குடியிருந்த புற்றை இடித்ததற்காக வருந்திய கிராமத்தினர், அதற்காக மன்னிப்பு வேண்டினர். ”தாயே… இனி, இங்கு இருக்க வேண்டாம். ஊருக்குள் வந்து விடு. முப்பலி பூஜை போட்டு உன்னைக் கொண்டாடுறோம்”
என்று பிரார்த்தித்தனர்.
ஆனால் செல்லியம்மனோ, ”உரல்- உலக்கை சத்தம், பிள்ளையின் அழுகுரல் எதுவுமே என் காதில் விழக் கூடாது என்பதற்காகவே இந்த வனத்தில் இருக்கிறேன்” என்றாள். ஆனால், கிராம மக்கள் தொடர்ந்து வற்புறுத்தினர்.
உடனே அம்மன், ”நான் உங்களுடன் வர வேண்டும் என்றால், ஊர்எல்லைக்கு வரும் வரை… ஒவ் வொரு அடி தூரத்துக்கும் ஓர் ஆடு வீதம் எனக்குக் காவு கொடுக்க வேண்டும்!” என்றாள். ஊருக்குள் வராமல் இருக்க அம்மன் செய்யும் சூழ்ச்சி இது என்பதை அறியாத ஊர் மக்களும் இந்த நிபந்தனையை ஏற்றனர். அதன்படி, ஓர் அடி தூரத்துக்கு ஓர் ஆட்டுக்கிடாவை பலியிட்டபடி, அம்மனை அழைத்துச் சென்றனர். ஆனால், வழியில்… ‘மாங்காய் தோட்டம்’ என்ற இடத்தை அடையும் முன் கைவசம் இருந்த ஆட்டுக்கிடாக்கள் தீர்ந்தன.
செய்வதறியாது அவர்கள் திகைத்தபோது, ”ஆட்டுக்கிடாவுக்கு பதில்… இனி, உங்களில் ஒருவரை பலி கொடுங்கள்” என்றாள் அம்மன். ஊர்க்காரர் கள் அதிர்ந்தனர். ‘மனுக்காவு (மனித பலி) கொடுக்க ஆரம்பித்தால் ஊரில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்களே!’ என்று எண்ணியவர்கள், ‘ஊருக்குள் வர விருப்பம் இல்லாததாலேயே, அம்மன் இப்படியெல்லாம் சொல்கிறாள்’ என்பதைப் புரிந்து கொண்டனர். அம்மனை ஊருக்குள் அழைத்துச் செல்லும் தங் களது விருப்பத்தைக் கைவிட்டனர். அம்மனை பழைய இடத்திலேயே (புற்று அருகில்) கொண்டு போய் வைத்து, வணங்கிச் சென்றனர்.
காலங்கள் ஓடின! அம்மன் குடி இருக்கும் இடத்தில், ஊர்க்காரர்கள் கோயில் கட்ட முயற்சித்தனர். ஆனால், ”எனது வாசலில் வரகரிசி பொங்கல் வைக்க அடுப்பு மூட்டும் போது கோயிலைக் கட்ட ஆரம்பித்து, பொங்கல் பொங்கி, சோறு ஆவதற்குள் கோயிலைக் கட்டி முடித்து விட வேண்டும்” என்று உத்தரவிட்டாள் அம்மன். இது, இயலாத காரியம் என்பதால், கோயில் கட்டும் பேச்சை எவரும் எடுக்கவே இல்லை!
இன்றும், அடர்த்தியாக படர்ந்திருக்கும் வேதக் கொடியின் நிழலில்தான் அமர்ந்திருக்கிறாள் அம்மன்.பெரிய வனத்தில்… அம்மன் குடிகொண்டிருக்கும் இடத்தில் மட்டுமே வேதக் கொடி உள்ளது என்பது தனிச் சிறப்பு!
இவளின் சக்தியை அறிந்த கேரள மந்திரவாதிகள் நால்வர், இந்த அம்மனைக் கடத்த திட்டமிட்டனர். அதன்படி இங்கு வந்த மந்திரவாதி கள், அம்மன் சிலையைத் தொட்ட தும் பார்வையைப் பறிகொடுத்தனர்!
மறு நாள் காலை! கோயிலுக்கு வந்த ஊர் மக்கள்… மண்ணில் விழுந்து அழுது புரளும்- பார்வையற்ற மந்திரவாதிகளைக் கண்டனர். ”இவர்கள், மீண்டும் பார்வை பெற என்ன வழி?” என்று அம்மனிடம் கேட்டனர். ”இவர்களின் பரம்பரையினர் அனைவரும் என் காலடியில் விழுந்து வணங்கினால், அவர்களுக்கு மறுபடியும் பார்வை கொடுப்பேன்” என்றாள் காட்டுச்செல்லி. அப்படியே செய்து பார்வை பெற்றனர் மந்திரவாதிகள்.
அம்மனுக்கு நித்திய பூஜைகள் உண்டு என்றாலும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெருங்கூட்டம் கூடுகிறது. ‘மாலை ஆறு மணிக்கு மேல், கோயில் வாசலில் எவரும் இருக்கக் கூடாது’ என்பது அம்மனின் உத்தரவு. ஆறு மணிக்கு மேல், அம்மனும் தேவலோக தேவதைகளும் இங்கு ஆடிப் பாடி வலம் வருவதாக ஐதீகம்!
ஆங்கில வருடப் பிறப்பு அன்று மட்டும் அம்மனின் உத்தரவு கேட்டு, இரவு 1200 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. திரு விழா கொண்டாடினால், அம்மன் ஊருக்குள் உலா செல்ல வேண்டி வரும் என்பதால், இங்கு திருவிழா கொண்டாடப்படுவது இல்லை.
திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து, தங்களின் வசதிக்கு ஏற்ப 11, 51, 101 என்ற எண்ணிக்கையில் பெண்களுக்கு வளையல்வாங்கிக் கொடுத்தால், திருமணத்தடை நீங்குவதாக நம்பிக்கை. குழந்தை வரம் இல்லாதவர்கள், இங்குள்ள திருக்குளத் தில் (ஒன்பது வாரங்கள்) மூழ்கி எழுந்து, ஈரத் துணியுடன் வந்து அம்மனை வழிபட்டால், பலன் கிடைக்கும்.
அம்மன் சிலை கண்டெடுக்கப் பட்ட போது, சிறிய விநாயகர் சிலை ஒன்றும் கிடைத்ததாம். இந்த சிலை யுடன் மற்றொரு விநாயகர் சிலையையும் சேர்த்து, அம்மனின் வலப்புறம் வைத்துள்ளனர். அம்மன் சந்நிதிக்கு எதிரில் சூலாயுதங்கள் உள்ளன. பலிகொடுக்க வேண்டிய ஆடுகளை இந்த சூலங் களுக்கு அருகே நிறுத்தி, அம்மனிடம் உத்தரவு வாங்குகிறார்கள். இங்கு பலியிடப்படும் ஆடுகளின் மாமிசத்தை இங்கேயே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
சூலாயுதங்களுக்கு அருகிலேயே, வேதக்கொடியின் வேர்ப்பகுதி, மரம் போல திரண்டு நிற்கிறது. குழந்தை வரம் வேண்டுபவர்கள், தங்களின் முந்தானைத் தலைப்பைக் கிழித்து, இந்த கொடியின் கிளைகளில் தொட்டில் கட்டிவிட்டுப் போகிறார்கள்.
இங்கு, பரிவார தெய்வங்கள் எதுவும் இல்லை. அம்மன் கோயிலுக்கு சற்று முன்னதாக இடப் புறத்தில், (திறந்த வெளியில்) நாகாத்தம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த அம்மன், வேப்பமரத்து நிழலில் அமர்ந்திருக்கிறாள். பௌர்ணமி தினங்களில் மட்டும் பூசாரிகள் இங்கு வந்து பூஜை செய்கின்றனர். மற்ற நாட்களில் பக்தர்களே பூஜிக்கின்றனர். இங்குள்ள வேப்பமரத்திலும் குழந்தை வரம் கேட்டு கட்டப்படும் முந்தானை தொட்டில்களைக் காண முடிகிறது. இந்தக் கோயிலுக்குப் பின்னால் திருக் குளம் ஒன்று உள்ளது. இரவில், காட்டுச்செல்லி அம்மன் தேவதைகளுடன் வந்து இதில் நீராடிச் செல்வாளாம். இதில் நீர் வற்றுவதே இல்லை! காட்டுச்செல்லி அம்மனுக்கு அபிஷேகம் செய்யவும் பொங்கல் வைக்கவும் இங்கிருந்தே தண்ணீர் எடுக்கிறார்கள்.
ஒரு முறை… இங்கு பொங்கல் வைக்க வந்த வர்கள், திருக்குளத்தில் தண்ணீர் கலங்கலாக இருந்ததால், வேறு எங்கிருந்தோ தண்ணீர் எடுத்து வந்து பொங்கல் வைத்தனராம். அப்போது, பொங்கல் பொங்கி ரத்தமாக வழிந்ததாம். இதன் பிறகு, இந்தக் குளத்து நீரின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தனராம்!

Leave a Reply