திருவெறும்பூர் – ௐ ந ம ச் சி வா ய*

*எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே !!*
🌤 *சர்வேஸ்வரன் எனப்பெறும் சிவபெருமான் உலகத்து உயிர்கள் அனைத்தையும் இரட்சித்து அருளுகின்ற தன்மையுடையவனாவான். அதனால்தான் மதுரையம்பதியில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்தான். நாரைக்கு முத்தி தந்தான். பன்றி குட்டிகளுக்காகப் பால் சுரந்தான். கல் யானைக்குக் கரும்பு தந்து அருந்தச் செய்தான். திருவானைக்காவில் யானைக்கும் சிலந்திக்கும் அருள் செய்தான். திருந்துதேவன்குடியில் நண்டுக்கும், திருச்சேலூரில் மீனுக்கும், புள்ளிருக்கு வேளூரில் சடாயுவுக்கும், வடகுரங்காடுதுறையில் குரங்குக்கும், உறையூரில் கோழிக்கும், கழுக்காணி முட்டத்தில் கழுகு, அணில், காகம் ஆகியவற்றிற்கும், குரங்கணில் முட்டத்தில் குரங்கு, அணில், காகம் ஆகியவற்றிற்கும் அருள் சுரந்தவன் அப்பரமன் என்பதைத் தல புராணங்கள் இனிதே விளக்கி நிற்கின்றன.* 
🐜 எறும்புக்காகத் தன் தலையைச் சாய்த்து அக்கோலத்திலேயே நிரந்தரமாகக் கயிலை நாதன் திகழும் திருத்தலம் தான் *திருஎறும்பியூர்* ஆகும். இவ்வூர் *திருவெறும்பூர், திருவரம்பூர்* என மக்கள் வழக்கில் அழைக்கப் பெறுகின்றது. இத்தலத்து ஈசனின் திருக்கோயில் திகழுமிடத்தை *பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், எறும்பீசம், பிரமபுரம், மதுவனபுரம், குமாரபுரம், இலக்குமிபுரம்* என பல பெயர்களால் புராணங்கள் குறிக்கின்றன.
🌸 திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சி நகரத்தின் புற எல்லையில் இவ்வூர் உள்ளது. சிறிய மலை மீது அழகிய கற்றளியாக எறும்பீசர் கோயில் காட்சி நல்கும். 125 படிகள் ஏறி மலைக்கோயிலை அடையலாம். இத்தலம் பற்றி இருவகையான தல புராணக் கதைகள் கூறப்பெறுகின்றன. 
🌺 தாருகாசுரனை வதம் செய்ய வேண்டி தேவர்கள் உபாயம் கேட்டு பிரம்மனை அணுகிய போது அவர் கூறியவண்ணம் இந்திரனும் பிற தேவர்களும் எறும்பு உரு கொண்டு இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட முற்பட்டனர். அப்போது இலிங்க வடிவம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் இருந்ததால் அத்திருமேனி மீது ஏற முற்பட்ட எறும்புகள் அவ்வாறு செய்ய இயலாமல் வருந்தின. அதனை உணர்ந்த கயிலைநாதன் தன் மேனியை புற்று மண் போன்று சொரசொரப்பாக மாற்றிக் கொண்டதோடு, தன் தலையைச் சற்று சாய்த்து அவை ஏறி வழிபட வகை செய்தாராம்.
🐜 எறும்புகள் திருமேனி மீது ஏறி வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்றன என்று 
ஒரு தலபுராணம் கூறுகின்றது. 
🌺 மற்றொரு புராணமோ திரிசிரனின் தம்பி கரன் என்பான்ய எறும்பு உரு கொண்டு இம்மலை மீது அமர்ந்த பிரானை வழிபட்டு பேறு பெற்றான் என்று கூறுகின்றது. முதற்புராணத்தில் கூறுவது போல எறும்பீசரின் திருமேனி புற்று மண் போன்று  தோன்றுவதோடு, தலை சாய்த்த கோலத்தையும் நாம் தரிசிக்கலாம். நீர் படாதவாறு இந்த இலிங்கத் திருமேனியை வழிபாடு செய்து வருகின்றனர். மலைக்கு கிழக்கே பெரிய நீர்நிலை (ஏரி) உள்ளது. அதுவே இத்தலத்துக்குரிய பிரம்ம தீர்த்தமாகும். தல மரமாக வில்வம் விளங்கு கின்றது. கிழக்கு நோக்கிய இவ்வாலயம் இரண்டு திருச்சுற்றுக்களுடன் விளங்குவதோடு திருமண்டபங்கள், தெற்கு நோக்கிய அம்மன் கோயில், சண்டீசர் கோயில் ஆகியவற்றுடனும் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. 
🍁 கருவறையில் எறும்பீசர் பேரழகோடு வீற்றிருக்க, ஸ்ரீவிமானத்து கோஷ்ட மாடங்களில் நர்த்தன விநாயகர், ஆலமர்ச்செல்வரான தட்சிணாமூர்த்தி, ஹரிஹரர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகள் அருள்பாலித்து நிற்கின்றன. பொதுவாக சிவாலயங்களின் மேற்கு திசை கோஷ்டத்தில் அண்ணாமலையார் எனப்பெறும் இலிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், திருமால், முருகன் ஆகிய திருமேனிகளில் ஒன்று இடம் பெற்றிருக்கும். ஆனால், இங்கு ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி திருமாலாகவும் உள்ள சங்கரநாராயணரின் திருவுருவம் காணப் பெறுவது சிறப்பம்சமாகும். இத்திருமேனி திகழும் கோஷ்ட மாடத்தின் மேற்புறம் காணப்பெறும் மகர தோரணத்தின் நடுவே யோகநரசிம்மரின் திருமேனி இடம் பெற்றுள்ளது. 
🌤 இந்த மகர தோரணமும் மற்ற கோஷ்டங்களில் உள்ள மகர தோரணங்களும் முற்கால சோழர்கலையின் சிறப்பு முத்திரைகளாக காட்சி நல்குகின்றன. நாயன்மார் நால்வர், சப்தமாதர்கள், விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, சூரியன், பைரவர் ஆகிய திருமேனிகள் திருச்சுற்றில் இடம் பெற்று திகழ்கின்றன.
திருநாவுக்கரசர் திரு எறும்பியூர் மலைமேல் உள்ள ஈசனைப் போற்றி இரண்டு தேவாரப் பதிகங்களைப் பாடியருளியுள்ளார். அவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்பதால் அவர் காலத்துக்கும் முந்திய தொன்மையுடையது இத்திருக்கோயில் என்பதை நாம் அறியலாம். அவர் தம் திருப்பதிகங்களின் ஈற்றடிகளில் *‘‘எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே’’* என்றும் *‘‘திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே’’* என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளதால் இம்மலைக் கோயிலின் தொன்மைச் சிறப்பை நாம் உணர இயலுகிறது. 
🦋 வரலாற்றுச் சிறப்புடைய இவ்வாலயத்தின் ஸ்ரீவிமானத்துப் புறச்சுவர்களிலும், பிற இடங்களிலும் முதலாம் ஆதித்தசோழன் காலந்தொட்டு பொறிக்கப் பெற்ற கல்வெட்டுச் சாசனங்கள் அலங்கரித்து நிற்கின்றன. இங்கு திகழும் கல்வெட்டுகளை ஆழ்ந்து நோக்கும் போது இம்மலைக்கு மேற்காகவும், காவிரி நதியின் தென்கரையிலும் திகழ்ந்த ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலம் என்ற ஓர் ஊருக்கும், பெருங்குளங்களோடு திகழ்ந்த திருஎறும்பியூர் என்ற ஊருக்கும் இடையே திகழ்ந்த மலை மீதுதான் எறும்பியூர் மகாதேவர் கோயில் அமைந்திருந்தது என்பதறியலாம். இக்கோயிலின் நிர்வாகப் பொறுப்புகளை இருவூராரும் மேற்கொண்டொழுகினர். தற்போது ஸ்ரீகண்டமங்கலம் எனும் ஊர் இருந்த இடம் அகரம் என்ற பெயரால் மாற்றங்கள் பல பெற்ற புதிய நகரமாக விளங்குகிறது. 
🍄 பண்டைய ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதி தற்காலத்தில் பாப்பான்குறிச்சி என்ற பெயரில் வழங்குகின்றது. திருஎறும்பியூம் திருவரம்பூராக பெருநகரமாக வளர்ச்சி பெற்று வருகின்கிறது. கி.பி. 875ம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற ஆதித்தசோழனின் இவ்வாலயத்து கல்வெட்டில் ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்திலிருந்த தென்கயிலாயம் எனும் கோயிலில் திருவிளக்கெரிக்க திருவரங்கத்து ஆடல் நங்கையான சேந்தன் செய்யவாய்மணி என்பாள் 10 கழிஞ்சு பொன் அளித்தாள் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இங்கு குறிக்கப்பெறும் தென்கயிலாயம் தான் மலைக் கோயில் எனச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அது தவறு. அது ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்திலிருந்த வேறு ஒரு ஆலயமாகும்.
🐲 ஆதித்தசோழனின் 19ம் ஆண்டு கல்வெட்டு சாசனம் ஒன்றில் தத்தன் சேத்தி என்பாள் எறும்பியூர் மலை மீது உள்ள ஆதித்த பட்டாரர்க்கும், அப்பெண் எடுத்த அவ்வாலயத்திலேயே இருந்த ஒரு கோயிலில் உள்ள இறைவனுக்கும் திருவிளக்கு வைக்கவும், நெய் அமுது படைக்கவும் நிலம் அளித்த செய்தி கூறப் பெற்றுள்ளது. இன்று நாம் காணும் திருஎறும்பியூர் மலைக் கோயிலைக் கற்றளியாக (கருங்கற் கட்டுமானக் கோயிலாக) புதுப்பித்தவர் கிளியூர் நாட்டு வேளாண் வீரநாராயணன் செம்பியன் வேதி வேளாண் என்பாராவார். இவர் செய்த பணிகள் அளப்பரியனவாகும். செம்பியன் வேதி வேளார் கண்டராதித்த சோழர்காலத்தில் வாழ்ந்தவர். 
🌷 ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து சபையோருக்கும், திருஎறும்பியூர் ஊரார்க்கும் இருவூர் எல்லையில் அமைந்த சில நிலங்கள் பற்றி பிணக்குகள் ஏற்பட்டபோதெல்லாம் அந்நிலங்களை இரு ஊராரிடமும் விலை கொடுத்து வாங்கி அதனை திரு எறும்பியூர் திருக்கோயிலுக்கு அளித்துள்ளார். அவ்வகையில் ஒருமுறை அவர் அவ்வூரார்களிடமிருந்து வாங்கிய நிலத்தை திருஎறும்பியூர் ஆழ்வார் கோயிலில் நாளும் உடுக்கை, தாளம் ஆகியவற்றுடன் திருப்பதிகம் (தேவாரம்) பாடுகின்ற நால்வருக்கு உடமையாக்கியதோடு தொடர்ந்து அவர்கள் மரபினர் அப்பணி செய்ய வழிவகையும் செய்தமையை நோக்கும் போது வியப்பே மேலிடுகின்றது. 
💥 அது போன்றே சீமாவிவாதம் என இருவூராரின் எல்லையில் அமைந்த நிலஉடமை பற்றிய பிரச்னை எழுந்த போது விளைநிலமாக இல்லாதிருந்த அந்த பாழ்நிலத்தை செம்பியன் வேதி வேளார் விலை கொடுத்து வாங்கியதோடு அந்நிலத்திற்கு ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து குளத்திலிருந்து நீர்பாய வாய்க்கால் அமைத்தும், நீர் வடிய எறும்பியூர் கழனிகளிடையே வடிகால் அமைத்தும் அந்நிலத்தை விளைநிலமாக மாற்றியதோடு அதனை மலைக்கோயில் தேவாரம் பாடுகின்ற நால்வருக்கே அளித்தான் என்பதை நோக்கும் போது அப்பெருந்தகையாளரின் மாண்பு நமக்குப் புலப்படும். இச்செம்பியன் வேதி வேளாரே ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து சபையோரிடமிருந்து விலை கொடுத்து நிலம் வாங்கி அதில் கோயில் ஊழியர்கள் வீடு கட்டிக் கொண்டு மட வளாகமாக அது அமைய வகை செய்தார். 
🌿 மேலும் திருஎறும்பியூர் மலைக்கோயிலின் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் பயன் பெறுமாறு ஜீவிதமும் (நிலையான வருவாய்) அளித்தார். இவை அனைத்தும் கண்டராதித்த சோழரின் கல்வெட்டுச் சாசனங்களில் பதிவு பெற்றுள்ள செய்திகளாகும். இக் கண்டராதித்த சோழர் பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். செம்பியன் மாதேவியின் கணவர் ராஜராஜ சோழனின் பெரிய பாட்டனார். அவர் தம் உயர் அலுவலரான சிறு தவ்வூருடையான் வேளாண் வீரநாராயணனான செம்பியன் வேதி வேளார் என்பாரின் புகழ் திருஎறும்பியூர் கோயில் உள்ளளவும் நிலைத்து நிற்கும் தகைமையதாகும். 
🍁 ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்தில் சித்திரகூடம் ஒன்று திகழ்ந்து அங்கே சபையோர் கூடி பல முடிவுகள் எடுத்தமையை சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மாமன்னன் ராஜராஜசோழன் ஊர்களின் நிர்வாக முறை பற்றி நேரில் ஆராய இக்கோயிலில் முகாமிட்டிருந்த போது காளி ஆதித்தன் என்பான் அக்கோயில் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து கொண்டிருந்தான் என்ற அரிய தகவலை ஒரு கல்வெட்டு கூறுவதோடு, அப்பேரரசன் காலத்தில் நிலம் அளப்பதற்கு அவ்வூரில் பயன்படுத்தப் பெற்ற மாளிகைக் கோல் என்ற கோல் பற்றிய தகவலை மற்றொரு கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. 
🌸 ராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆண்டு சாசனத்தில் இம்மலைக்கோயில் ஈசனின் திருப்பெயராக திருஎறும்பீஸ்வரம் உடைய மகாதேவர் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இம்மன்னவனின் ஐந்தாம் ஆண்டு சாசனத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த உய்யகொண்டான் தெரிந்தவேளம் என்ற குடியிருப்பில் வசித்த பெண் ஒருத்தி இக்கோயிலுக்கென அளித்த விளக்குத்தானம் பற்றி கூறப் பெற்றுள்ளது. ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்திற்கு *‘மலரி’* என்ற பெயர் இருந்தமையை மூன்றாம் ராஜராஜனின் சாசனம் குறிப்பிடுகின்றது. இவ்வூரில் பிறந்தவர் தான் *கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தராவார்.*
                  *கல்வெட்டு செய்திகள் தொடரும்….*
ꚘꚘ 🌵 ꚘꚘ 🌵 ꚘꚘ 🌵  ꚘꚘ 
*தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*
ꙮ 🌸ꙮ 🌸ꙮ 🌸ꙮ 🌸ꙮ 🌸ꙮ 
 இ றை ய ன் பி ல் 
Credits – 🦄 *மூ.ரா.பாரதி ராஜா/8447534825 ; 7011992634* 🦄

Leave a Reply