​மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!! 

சிறிய மஞ்சள் நிறப் பூக்களை இது பெற்றிருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பழங்கள் பவழ நிறமுடையதாகவும் இருக்கும். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்க கூடிய இச்சீந்தில் கொடி வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலினுடைய இலை, தண்டு, வேர் அத்துனையும் மருந்தாகிப் பயன் தரக்கூடியது. சீந்தில் உடலுக்கு மிக வலிவைத் தரக்கூடியது. 
இது தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. சீந்தில் கொடி தீநீர் முறைசுரம் (விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் சுரம்), சோர்வு, செரியாமை, வளிநோய்கள் என்னும் வாத மிகுதியால் ஏற்பட்ட நோய்கள், சிரந்திப் புண்கள் ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. வலியைப் போக்க கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியது. கடுப்பு தரும் விட்டு விட்டு வருகின்ற வலியை விரட்டக் கூடியது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. 
கல்லீரலைப் பாதுகாக்கக் கூடியது. அல்லது பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. உள்ளலை ஓட்டக் கூடியது. வெப்பத்தை தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறு களை வேரறுக்கக் கூடியது. பலம் தரவல்லது. சிறுநீரப் பெருக்கியாகச் செயல்படுவது, சீந்தில் கொடியின் சாறு கடுமையான காய்ச்சலின் போது காயச்சலைத் தணிக்கப் பயன்படுகிறது. சீந்தில் கொடி தீ நீர்வாத சுரத்தையும் பித்த சுரத்தையும் தணிக்கக் கூடியது. 
இதன் மாவு (சீந்தில் கொடியினின்று தயாரிக்கப்படும் சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேறும் அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. மேலும் வயிற்றுப் போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்த வல்லது.  சீந்தில் கொடியின் தண்டுப் பகுதியில் ஆல்கலாய்ட்ஸ் என்னும் வேதிப்பொருட்களான பெர்பெரின், கசப்புச் சுவைகள் எனப்படும் கொலும்பின், சேஸ்மான்தின், பால்மரின் மற்றும் டினோஸ்போரான், டினோஸ்போரிக் ஆசிட் மற்றும் டினோஸ்போரால் ஆகியன அடங்கியுள்ளன. 
நவீன வலி நீக்கும் மருந்தான சோடியம் சாலிசிலேட் என்னும் மருந்தில் ஐந்தில் ஒரு பங்கு வீரியத்தை சீந்தில் பெற்றிருக்கிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக் கின்றன. சீந்தில் கொடியினின்று எடுக்கப்படும் சத்துவம் இன்று நவீன மருத்துவமும் கண்டு அஞ்சுகின்ற ஈகாலி என்னும் எஸ்செரிச்சியா சாலி என்று சொல்லப் பெறுகின்ற நுண்கிருமிகளையும் கொன்று வெளியேற்றும் வல்லமையுள்ளது. இந்த ஈகாலி என்னும் கிருமி இரையறைப் பகுதியில் புண்களை ஏற்படுத்துவதோடு வயிற்றில் தாங்கவொண்ணாத வலியையும், அடிக்கடி வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தி உடலை மெலியச் செய்வதோடு பெருந்துன்பத்துக்கு ஆட்படுத்துகிறது. 
இது மட்டுமின்றி காசநோய் என்று சொல்லப் பெறும் என்புறுக்கி நோய்க்குக் காரணமாக அமை கின்ற மைக்கோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ் என்னும் கிருமிகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது என்பதும் நவீன ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீந்தில் சத்துவத்தை உள்மருந்தாக கொடுத்து சோதித்துப் பார்த்ததில் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரையின் அளவும் சிறுநீரில் கலந்து வெளியாகும் சர்க்கரையின் அளவும், ரத்தத்தில் பரவியுள்ள கொழுப்புச்சத்தின் அளவும் கணிசமான அளவுக்கு குறைந்து வந்ததும் தெரிகின்றது.
சீந்தில் மருந்தாவது எப்படி? 
சீந்தில் கொடியினின்று இலைகளைப் பிரித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரண்டு வேளையும் நீரோடு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சீந்தில் தண்டுகளைக் காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியோடு நான்கு டம்ளர் நீர்விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சுண்டும்படி எடுத்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வயிற்று பொருமல், செரிமானமின்மை, காய்ச்சல் ஆகிய துன்பங்கள் விலகும். 
நல்ல குணம் கிடைக்கின்ற வரையில் தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைத்து மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பிலியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருக்க நீர் தெளிந்துவரும் அந்த தெளிந்த நீரை இருத்தி விட்டு வேறு புதிதாக நீர் சேர்த்து கலக்கி வெயிலில் இட்டு சுண்ட வைக்க வேண்டும். இப்படிப் பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். 
இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இதை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடுஞ்சுரத்துக்குப் பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம் அல்லது நம்மை துன்புறுத்தும் வலி, காமாலை, இருமல், மூர்ச்சை, வாந்தி, கோழைக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு தருவதாக அமையும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி இளஞ்சுட்டோடு புண்களின் மேல் போட்டு வர வீக்கம் கரைந்து வலியும் குறைவதோடு புண்களும் ஆறி விடும். 
சீந்தில் பற்பாடகம், சந்தனம், விலமிச்சு, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றைக் சூரணமாக சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தீநீராக்கி கொடுக்க பித்தத்தால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும். சீந்தில் கொடியை நசுக்கி 35 கிராம் அளவு எடுத்துக் குளிர்ந்த நீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு ஊறிய பின் வடிகட்டி சிறிது இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப் பொடி சேர்த்து 50 மி.லி. வீதம் தினம் இரண்டு அல்லது 3 முறைகள் குடித்து வர காய்ச்சல், செரியாமை, மஞ்சள் காமாலை, ஈரல் வீக்கம், ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு ஆகியன கட்டுக்குள் அடங்கி வரும். 
சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்து அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர், ரோஜாப்பூ ஆகியன வகைக்கு 10 கிராம் அளவு சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஓரிரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி வைத்துக் கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினம் காலை வேளையில் கொடுத்து வர முறைக் காய்ச்சல், வயிற்று உப்பிசம், நீண்ட நாட்பட்ட செரியாமை, வயிற்றைப் பாதித்து துன்பம் செய்கின்ற பல்வேறு நோய்களும் விலகிப் போகும். 
சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினம் இருவேளை 50 மி.லி. குடித்து வர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். சீந்தில் எந்த சிரமமுன்றி வளரக்கூடியது. வீடுகளில் கூட பயிரிட்டு படரவிட்டு பயன்படுத்த இயலும்.

Leave a Reply