பாட வேண்டும் நான்!

பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு, ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன் கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம் வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே! பதப்பொருள் : நின் மெய்யர் மெய்யனே – உன் மெய்யன்பர்க்கு மெய்யானவனே, போற்றி – வணக்கம்; நான் – அடியேன், நின்னையே – உன்னையே, பாட வேண்டும் – பாடுதல் வேண்டும், போற்றி – வணக்கம்; நான் – அடியேன், பாடி – பாடுதல் செய்து, நைந்து நைந்து உருகி – மனம் கசிந்து கசிந்து உருகி, நெக்கு நெக்கு – நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆடவேண்டும் – ஆடுதல் வேண்டும்; போற்றி – வணக்கம்; நாயினேன் நான் – நாயினேனாகிய அடியேன், அம்பலத்து ஆடும் – அம்பலத்தில் நடிக்கின்ற, நின் கழல் போது – உன் திருவடித் தாமரை மலரை, கூடவேண்டும் – சேர வேண்டும்; போற்றி – வணக்கம்; எனை – அடியேனுக்கு, இப்புழுக்கூடு நீக்கு – இந்தப் புழுக்கூடாகிய உடம்பை நீக்குவாயாக; போற்றி – வணக்கம்; நான் – அடியேன் பொய் எலாம் – பொய்கள் எல்லாவற்றையும், வீட வேண்டும் – நீங்க வேண்டும்; போற்றி – வணக்கம்; வீடு தந்தருள் – முத்தியைக் கொடுத்தருள்வாயாக. விளக்கம் : பாடுதல், மொழிப் பணி; உருகுதல், உள்ளப் பணி; ஆடுதல், மெய்ப்பணி. மொழி மனம் மெய்யென்னும் முக்கரண வழிபாடாகிய இவற்றை இறைவன் உலகத்தில் இருந்து செய்ய விரும்பி, ‘வீடு தந்தருளு’ என்று வேண்டுகிறார். இதனால், வீட்டுலக இன்பத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

Leave a Reply