குளிர் பானங்கள்!!!

கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு பலவிதமான நோய்களால் அவதிப்படுகிறோம்.
கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? 
சமீபத்தில் தான் இளைஞர்கள் மத்தியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை குளிர் பானங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருக்கிறது.  வெளிநாட்டு குளிர் பானமானலும், நம் நாட்டு குளிர் பானமானாலும் அனைத்தும் கெடுதல் விளைவிக்கக் கூடியது தான். 
வாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க பூச்சிக்கொல்லி ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் தொண்டையில் கட்டி, எலும்புத் தேய்மானம், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் நம் மீது தாக்குதல்களை நடத்துகின்றன.
கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்துக்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படும் பல பாரம்பரிய பானங்கள் உள்ளன. அவற்றில் சில பானங்கள் குளிர்காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. 
இந்தத் தமிழர் பாரம்பர்ய பானங்களை பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இளநீர்.
இது இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியது. நீர்கடுப்பை நீக்கக் கூடியது. இதில் இனிப்பான இளநீரைத்தான் பருகவேண்டும். 
பதநீர்.
பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளன.  
சமீபகாலங்களில் போலி பதநீர் தயாரிப்புப் பெருகிவிட்டது. சுக்ரோஸ் பௌடர் தண்ணீரில் கலக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதுபோன்ற பதநீர்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உண்மையான பதநீர் குடிக்கும்போது, துவர்ப்புச் சுவை இருக்கும். குடித்து முடித்ததும், இனிக்கும். சுக்ரோஸ் கலந்த பதநீர் குடிக்கும்போதே இனிப்பு தெரியும். தமிழ்நாடு பனைபொருள் கார்ப்பரேஷனில் தரமான பதநீர் விற்கப்படுகிறது.
கர்ப்பக் காலத்தில்  பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். இந்நிலையில் மாத்திரைகளை விட இயற்கையான பதநீர் தாய்க்கு சிறந்தது. பதநீீர்  பிரசவ காலத்தில் ஏற்படும், உடல்  உஷ்ணத்தையும் குறைக்கும். 
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தைத்யும் பதநீர் தடுக்கும்.
பதநீரில்  நுங்கை ஊற வைத்து ருசிப்பது அலாதியான  சுவையை தரும். மேலும்  இக்கலவை வெப்பத்தையும் தணிக்கவல்லது.
பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப் படுகின்றன.
நீர்மோர்.
நீர்மோர் தாகம் மற்றும் உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பானம் இது.
தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி, வெண்ணெயை வடிகட்டவும். நீர்மோரில் பச்சைமிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரைத்த இஞ்சி, மிளகுத் தூள், கடுகு, புதினா சேர்க்கவும். இதனால் செரிமானம் எளிதாகும்.
நன்னாரி சர்பத்.
சுவையாலும் வாசனையாலும் மதிமயங்கச் செய்யும் நன்னாரி சர்பத், மிகச் சிறந்த குளிர்ச்சியூட்டி. 
நன்னாரி உமிழ்நீர்ச் சுரப்பிகளின் (Salivary glands) செயல்பாட்டை அதிகரித்து, நாவறட்சியைப் போக்குகிறது. இது உடலில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைத் தடுப்பதுடன், ரத்தத்தையும் தூய்மை படுத்தும் Blood purifier ஆகும். 
மேலும் பரபரக்கும் அதிவேக மனிதர்களின் மனதைச் சாந்தப்படுத்தும் `மனசாந்தினியாகவும்’ நன்னாரி செயல்படுகிறது.
நன்னாரி வேரை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் லேசாகக் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறும், சிறிது பனைவெல்லமும் சேர்த்தால் நலமான நன்னாரி சர்பத் தயார். இத்துடன் ஊரவைத்த பாதாம் பிசின், பாதாம் கூர் விதை அல்லது, சப்ஜா விதை கலந்து அருந்தலாம். 
மொகலாய சக்கரவர்த்தி பாபரின் சுயசரிதையான ‘பாபர் நாமாவில்’ சர்பத் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. 
நன்னாரி மணப்பாகு டானிக்.
100 கிராம் நன்னாரியுடன் 400ml நீர் சேர்த்து கொதிக்கவைத்து  100ml ஆக வற்றவைக்கவும். இந்த நன்னாரி கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து பாகு பதத்துக்குக் காய்ச்சி பத்திரப்படுத்தி, காலை மாலை சிறிது நீர் கலந்து அருந்தலாம்.
பாகு என்பது தமிழர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பிரிசர்வேடிவ். பாகு சேர்ப்பதால், உணவுப் பொருட்களை ஆறு மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.
கரும்புச் சாறு
இனிப்பான  கரும்புச்சாறு, உடலின் சூட்டை தணிக்கக் கூடியது. அதிகரித்த பித்தத்தைக் குறைத்து, வெயில் காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பையும் தடுக்கிறது.
கரும்புச் சாற்றோடு தயிர் சேர்த்து அருந்துவதால் தேக எரிச்சல் நிவர்த்தியாகும்.
கரும்புச் சாற்றோடு இஞ்சி, எலுமிச்சை கலந்த பானம், செரிமானத் தன்மையை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.
எலுமிச்சை பழம்.
எலுமிச்சை சாற்றோடு, பனை வெல்லம் அல்லது உப்பு சேர்த்து அருந்துவதால் உற்சாகம் ஏற்படுவதோடு உடலின் நீர்ச்சத்தும் அதிகரிக்கும்.
நீண்ட பயணம் செல்வோருக்கும் தேவையான ஆற்றலை தருகிறது. பொன் நிறத்தில் வறுக்கப்பட்ட சிறிதளவு சீரகத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த, சூட்டினால் வரும் பேதி நிற்கும்.
பானகரம்.
இப் பெயரை நம்மில் பலர் கேட்டிருக்க மாட்டோம். பானகரம் என்பது  கொடம்புளி போட்டு கொதிக்கவைத்த நீரில் நாட்டு வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்படும்.
இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், சிறுநீரக கல் பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க உதவும்.
காயகல்பம்.
காலை இஞ்சிச் சாறு, மதியம் சுக்குப் பொடி கலந்த நீர், இரவு கடுக்காய்ப் பொடி கலந்த நீர் குடித்துவந்தால் தீராத நோயெல்லாம் தீரும். இந்த முறைக்கு `காயகல்பம்’ என்று பெயர். இது சுக்குமல்லி காபி போன்ற ஓர் ஆரோக்கிய பானம்.
காலநிலைக்குத் தகுந்தாற்போல், உடல் உஷ்ணத்தை அதிகரித்துக் கொள்வதே காயகல்பத்தின் அடிப்படைப் பண்பு.  இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால், இவ்வாறு தொடர்ந்து குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கறிவேப்பிலை ஜுஸ்.
கறிவேப்பிலை – ஒரு கட்டு, வெல்லம் – 100 கிராம், ஏலக்காய் – 2, இஞ்சி – சிறிதளவு. செய்முறை: கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்தலாம்.
இது இரும்புச் சத்து, வைட்டமின் – ஏ, நீர்ச்சத்து, மற்றும் கலோரி நிறைந்த பானம். பித்தத்தைத் தணிக்கும். நன்றாக முடி வளரும். கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோயுண்டாக்கும் `ஃபிரிட்ஜ்’ நீருக்குப் பதிலாக,  தண்ணீரில் கருப்பட்டி, எலுமிச்சை, இஞ்சி கலந்த  இனிப்பு பானத்தைக் கொடுத்து மகிழ்விக்கலாம். 
இது போன்ற சத்தான ஆரோக்கிய பானங்கள் பருகுவதை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். நன்றி.

Leave a Reply